Wednesday, September 1, 2010

இனத்தின் மரணம்

எஞ்சியிருப்பதும்
எப்போதும் எம்முடன் இருப்பதும் துரோகம்

எமது அடயாளம் துரோகம்
எமது தோல்விகளை நாமே தீர்மானித்தோம்
இத்தால் வரலாற்றில் நாம் எப்போதும் அடிமைகள்
இது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விதி.

நாம் வணங்கும் கடவுள் ஒரு துரோகி
ஏனெனில் அங்குதான் ஜனநாயக மறுப்பு பிறக்கின்றது
மனிதாபிமானத்திற்கு குழிதோண்டுதல் பழக்கப்படுகின்றது
கோயில் கட்டியவனும்
படையல் உணவை உற்பத்திசெய்தவனும்
வேலை முடிந்ததும் நிராகரிக்கப்படுகின்றனர்

கடவுள் எம்மைப் படைக்கவில்லை
வஞ்சகத்தை நிலைநாட்ட
நாமே கடவுளைப்படைத்தோம்

மெய்மறக்கும் பக்திப் பரவசங்களின் பின்னாலும்
பவ்வியமான உதடுகள் உச்சரிக்கும் கீர்தனைகளுக்குப் பின்னாலும்
உயிர்கள் வதைபடுகின்றது இதயங்கள் பிழிபடுகின்றது

வயல்களில் மானுடர் வதைபட திண்ணைகளில் மொழி வளர்ந்தது
களைப்பிலும் வேதனையிலும் மானுடர் முனக
தேவார திருவாசகங்கள் செழித்தது

தேவடியாள்களை ஆட வற்புறுத்தி முறுக்கேற்றினார்கள்
கோயில் சுற்றாடல்களில்
குறிகளின் பசிக்கு கடவுள் பெயரால் யோனிகள் பணிவிடைசெய்தது

ஆடலையும் பாடலையும் திருடிக்கொண்டு
அதுவே எம் கலை என்றார்கள்

பறையடித்தவனை துரத்தி இசையை புடுங்கிக்கொண்டார்கள்
பட்டுவேட்டிகட்டி தவிலடித்து தம்பட்டமடித்தார்கள்

ஆகரத்தில் நேர்மையில்லை
உணவை போசித்து
உற்பத்தி செய்தவனையே தீண்ட மறுக்கும் சமுதாயம்

வாழ்வே துரோகம்
வஞ்சகமே பண்பு
களவே கலை
ஜனநாயக விரோதமே சமூகம்
தேசியம் ஒரு பாவம்
மர்க்சியத்தால் அல்ல
எந்த இசத்தாலும் கழுவ முடியாத பாவம்
ஒருவனை ஒருவன் சிலுவையில்
அறைந்துகொள்வதுதான் முடிவு
பாவத்தின் சம்பளம் இனத்தின் மரணம்.

Tuesday, May 11, 2010

நடந்தபடி...

காலம் ஒரு நாள்
என்
கைகளை பிடித்து
கொற கொறவென்று
இழுத்து சென்றது

எங்கே என்று நான்
கேட்டேன்
சோறு இருக்கும் இடத்தை
காட்டப்போவதாக சொன்னது

ஏன் புதுசாய் உனக்கிந்த வேலை?

இல்லை
இந்த வேலை எனக்கு புதிதில்லை

ஓ...

முன்பு யாரை இழுத்து சென்றாய்?

உன்னை பெற்றவரை இழுத்துச் சென்றேன்

இப்போது ஏன் என்னில் கரிசனை?

அவர்களுக்கு என்னுடன் நடக்கும் தென்பில்லை.

அவர்கள் என்னுடன் நடக்கும் போது
தலை சுற்றி விழத்தொடங்கிவிட்டார்கள்.

இதனால் உனக்கென்ன நட்டம்?
இருந்தும் நல்லதை செய்கின்றாயே !

என் வயலில் விதைப்பும் அறுவடையும் குறைந்து விட்டது
இது என் பெருநட்டம்
உனக்கு பசிக்கின்றது அதனால் இழுத்து செல்கின்றேன்

யார் நீ?
உன் வயிற்றுப்பசிக்கு மருந்து போடுபவன்
உனக்கு பசி இல்லையா?
உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்வேன்
எனது அசதிக்கும் களைப்பிற்கும் மருந்து உன்னிடம் உண்ணடா?
அது உன்னிடம் உள்ளது
என்னிடமா?
ம்ம்ம் வயிற்றுப்பசியை நினைத்துக்கொள்
மற்றவலி குறைந்துவிடும்

நீ கொடியவன் !!
வலிக்கு வலிதான் மருந்தா?
உனக்கு பசியும் வலியும் விழையாட்டா?

இல்லை
எனக்கு பசி உனக்கு வலி
உனக்கு வலி உனக்கு பசி
இது விதி

இல்லை உன் சதி

அது தான் விதி

மாற்ற முடியாதா?
என்போல் நீ மாற முடியும்
அப்போது நீ என்னும் பலருக்கு
சோறுக்கு வளிகாட்ட வேண்டும்

கொடுமை உணர்ந்தவன்
எப்படி கொடுமை உருவாக்குவது

வலிக்கு மருந்து
சுகத்துக்கு வழி
என்னுமொருவன் வலியில் இருந்தே பிறக்கின்றது

இல்லை
பிறப்பிக்கப்படுகின்றது

இருக்கட்டும்

எனக்கது தேவை இல்லை
அப்போ வலியோடு வாழ்

உன்னை கொல்வது என்
விதியாக இருக்கலாம்

என்னை கொல்வது
தீர்வாகுமா? இல்லை
என்னை கொன்றுவிட்டு
நீ என்போல் மாறாமல் இருப்பதே தீர்வு
உன்னால் முடியுமா?

முடியும்
ஆனால்
முடியாதவர்கள் பலர்

காரணம்??

தனி மனிதனும் நானே
சமூகமும் நானே
சமூகம் மாற வேண்டும்

ஆனால் விடமாட்டோம்

அது தான் உன்னை கொல்ல வேண்டும்

அதற்கு முதல் சமூகத்தை மாற்ற வேண்டும் அதற்கு
அனுமதியோம்
முரண்பாட்டை மூட்டிக்கொண்டே இருப்போம்

எனக்கு பசி எடுக்கின்றது
அதிகம் கதைக்க முடியவில்லை
சோறு காட்டுகின்றேன் நட

என்னுமொருவன் என் விட்ட இடத்தை தொடருவான்

அவனுக்கு பீட்சா காட்டுவோம்
கவலைப்படாமல் நட

கருத்தரங்கு

சமீபத்தில் எல்லோரும் ஒன்று கூடினார்கள்
இது ஆச்சரியம் தான்
இருந்தாலும் உண்மை

எல்லோரும் தங்களை அறிமுகம் செய்தனர்
பழைய புதிய இடது சாரிகள் வலது சாரிகள்
இலக்கிய வாதிகள்
நாத்திக வாதிகள் ஆத்திக வாதிகள்
மதவாதிகள் சாதிய வாதிகள்
வைத்தியர்கள் பொறியியலாளர்கள்
இவ்வாறே லட்சம் வரை அறிமுகம் தொடர்ந்தது
புத்திஜீவிகள் கூட்டம் ஒன்று கூடியதால்
சிங்களவர்கள் சிலர் மிரண்டனர்
இருந்தும் எவர் ஒருவரும் தமிழர் என்று
அறிமுகம் செய்யாததால்
பயம் எதுவும் இல்லை என்று
சோலியை பார்க்க சென்றனர்

சென்றவர்களில் ஒருவன் கேட்டான்
என்ன தமிழர் எல்லோரும் ஒன்று கூடுகினம்?
அப்படி சொல்லப்படாது
அவங்களுக்கு தெரியாததை போதிக்க கூடாது
அமைதியாக நட என்று பதிலுரைத்தான்

பின்னர் இனப்பிரச்சனை குறித்த கருத்தரங்கு
மங்களவிளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமாகி
மதியபோசனம் தேனீர் விருந்துடன் நிறைவுற்றது.

இசங்கள்

சோழக் காற்றும் கொண்டலும்
வாடைக் காற்றும் வீசும் போதும்
காலங்கள் மாறி மாறி
தூறலும் பெருமழையும்
பங்குனி வெயிலும்
எங்கள் தேசமெங்கும் ஆட்சி செய்தபோது
இயன்றளவு நாமும் ஒத்துப்போனோம்
ஒன்றிப்போனோம்
தத்துவங்கள் மட்டும் எப்படி
விலத்திப்போனது?

உழவு சாலுக்குள் விதைபடாத இசங்கள்
ஆகக் குறைந்தது
வரம்புக்கு கூட வரவில்லையே!!
அறுவடை முடிந்து
மூட்டை கட்டும் போதும்
சாக்கில் கூட எதுவும் எழுதப்படவில்லை
விற்பனைச் சந்தையில் கூட
சண்டைவரவில்லை
இறுதியில்
சந்தையை பற்றி திண்ணையில்
இருந்து பேசப்பட்டது

உழைத்துக் கழைத்து
ஓய்வெடுக்க நல்ல திண்ணைகள்
உச்சி வெயிலில் நாரியாத்த
நல்ல திண்ணைகள்
நாலுவார்த்தை கதைக்க
ஏற்ற இடம்
கதைகள் பயிர்போல் தழைத்து
சித்தாந்தங்கள் தத்துவங்களாக மாறும்
காற்றையும் காலத்தையும்
இவ்வாறுதான் கண்டறிந்து பயிர் செய்தோம்

எப்படி நுட்பமாக திண்ணைகள் பறிக்கப்பட்டது?
எப்படி வயல் வரம்பில்
உழைப்பாளிகள்
இழைப்பாற நிர்ப்பந்திக்கப்பட்டனர்?

நிழலையும் புடுங்கிய தத்துவங்களும் இசங்களும்
வெள்ளை வேட்டிகளுக்கு மட்டும் சொந்தமானது
திண்ணைகளில் இருந்து
வயலை ஆட்சி செய்ய அதிகாரம் யார் தந்தது?

இசங்களுக்கும் தத்துவங்களுக்கும்
சோறுபோட்டு கழைத்துவிட்டனர்
இன்னும் ஒய்யாரமாய் திண்ணையில் சரிந்து கொண்டு
எத்தனை காலம் புளிச்சல் ஏவறை விடப்போகின்றனர்?

உங்கள் வெள்ளை வேட்டிகளை புடுங்கி
காவல் வெருளிக்கு கட்டும் நேரத்தில்
குழாய் போட்டு சோபாவில் குந்திவிட்டீர்கள்
இருந்தும் புளிச்சல் ஏவறை நாறுகின்றதே
எப்படியோ
உங்கள் கூச்சல் வயலை விட்டு
தூரப்போய்விட்டது.

புத்திசீவிதம்

பெருகிவரும் கூச்சல்
ஜன்னல்களை ஊடறுத்து
வீடுகளை நிரப்பி நிற்கின்றது

கூச்சலின் மத்தியில்
நுண்ணறிவு போராடுகின்றது
ஆயிரம் விந்தணுவில்
ஒன்று கருவறையில் சேர்வது போல்
நுண்ணறிவின் நம்பிக்கை
எல்லோரிடத்திலும்

அரசர்களும் சிம்மாசனங்களும்
குடியானவர்களை விட
கூடுதலாகி விட்டது

எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள்
இருந்தும்
எந் நாடு என்று எவரும் அறியார்.

அரியணைகளுடன்
உலகமெல்லாம்
அலையும் மன்னர்கள்
குடியானவர்களை தொலைத்ததை
சற்றேனும் சிந்திப்பாரில்லை

ஆழ்வதற்கு எதுவும் இல்லை
ஆகக் குறைந்தது
வேலி முருங்கையும்
சாய்மனைக் கட்டிலும் கூட இல்லை
இருந்தும்
ஆட்சி செய்கின்றார்கள்

அரசனும் நானே
மந்திரியும் நானே
மக்களும் நானே

என் கட்டளைகளை கேட்க
ஒருவன் இருந்தால் போதும்
இல்லா விட்டாலும் பரவாயில்லை
எங்கிருந்தும் நான் அழ்வேன்.

உலகில் இவர்போல்
நம்பிக்கையுள்ளவர் யார்?

உடைவாளும் கிரீடமும்
கோமணமும்
உண்மையில் இல்லாவிடிலும்
பத்திரமாக நாக்கில்
இன்னும் பளபளப்பாக

மன்னர்கள் வருகின்றார்கள்
வருகை அறிவிக்க எவரும் இல்லை
பராக் சத்தம் கேட்கவில்லை
ஓரத்தில் யாரோ
பாக்கி என்று முணுமுணுத்தது
செவிடன் காதில் ஊதிய சங்காய்
மன்னர் வீறுநடை போடுகின்றார்.

சில மன்னர்களை பார்க்க
ம சே துங் நினைவுக்கு வருகின்றர்
கார்ல் மார்க்ஸ் நினைவுக்கு வருகின்றார்
காஸ்ரோவும் சேவும் கலந்த
ஒரு உருவம் நினைவுக்கு வருகின்றது

என்னும் உலகின் அத்தனை புரட்சியாளர்களும்
கண்ணெதிரே நினைவுக்கு வருகின்றார்கள்
என்ன புண்ணியம் செய்தனோ
என் இனத்தை நினைக்க இவ்வளவு மகிழ்ச்சி
என்னுள் பொங்கி வழிகின்றதே

Sunday, May 9, 2010

கள்ளிச் செடிகள்

கள்ளிச் செடிகள்

எனது செயல்களில்
அவர்கள் குறைபாட்டை காணவில்லை
மாறாக
எனது செயலையே குறையாக கண்டார்கள்
எனது பிறப்பில் குறைகண்டார்கள்
எனது ஊரில் குறை கண்டார்கள்
எனது கடவுள் மீதும் குறை கண்டார்கள்

அனேகமாக எல்லாம் எனக்கு அப்பாற்பட்ட
விசயங்களாகவே இருந்தது
என்னால் திருத்த முடியவில்லை
திருத்தவும் முடியாது

எனது உணர்வுகள் நிரந்தரமாக
தவிக்கத் தொடங்கியது
வற்றிப்போன குளத்தில்
பொருக்கு வெடிப்பது போல்
எனது உணர்வுகள் வெடித்திருந்தது.
என்னைப் போலவே எல்லோருக்கும்
நிச்சயமாக இருந்தது.

உணர்வுகளின் இடுக்குகளில்
முளைத்து நிற்கும்
கள்ளிச்செடிகள்
கண்ணீர் வறண்டபோதும்
வளர்கின்றது
இலைகளில் முட்கள்
கூர்மையாக திக்கொன்றாக நீட்டி நிற்கின்றது

விசனம் வரும்போதெல்லாம்
ஒன்றோடு ஒன்று முட்டி
பால்வடிகின்றது
உணர்வுகளின் இடுக்குகள்
நிரம்பி வழிகின்றது

பாலின் சுவையை அனுபவிக்க
பழகிவிட்டோம்
தாய்ப் பாலின் சுவை இரண்டு வருடமாயின்
கள்ளிப்பாலின் சுவை இடுகாடு வரையும் வருகின்றது

அவ்வப்போது
தேசியவெள்ளம் வந்து
குளத்தை நிறைத்து வெடிப்பை நிரவி
சேறாக்கி விடுகின்றது
தட்டுத்தடுமாறி தாமரைகளும் முளைத்துப் பூக்கின்றது
இருந்தும் கள்ளிகள் அழிவதில்லை
நீருக்குள் அமிழ்ந்து உரசுகின்றது
கோடைகாலம் வந்தவுடன் மீண்டும் துளிர்க்கின்றது

எத்தனை அழகிய செடிகள் இருந்தும்
என் உணர்வின் இடுக்கில்
அவை முளைத்ததில்லை
காற்று வாக்கில் வந்த விதைகள்
தவறி முளைத்தாலும் நான் வளரவிடுவதில்லை

கள்ளிகளை நாம் ஆராதிக்கின்றோம்
எனது அறிவையும் கடந்து நேசிக்கின்றேன்
இந்த வினோதம் தானா எனது கடவுள்?
அம்மணமாய் தெருவில் அலைகின்றபோதும்
கெளரவமாய் சிரிக்க கள்ளிகள் எனக்கு பலம்தருகின்றது.

எனது தாயை புதைத்த இடத்தில்
இத்துப்போன எலும்புகள் அனாதயாய்
மண்ணுக்குள் மக்கிக்கொண்டிருக்கும்
இரண்டு கள்ளிச் செடிகள் அதிலும் செழித்து
எமது இருப்பின் அடையாளமாய்
உரசிக்கொண்டிருக்கும்.