Tuesday, May 11, 2010

இசங்கள்

சோழக் காற்றும் கொண்டலும்
வாடைக் காற்றும் வீசும் போதும்
காலங்கள் மாறி மாறி
தூறலும் பெருமழையும்
பங்குனி வெயிலும்
எங்கள் தேசமெங்கும் ஆட்சி செய்தபோது
இயன்றளவு நாமும் ஒத்துப்போனோம்
ஒன்றிப்போனோம்
தத்துவங்கள் மட்டும் எப்படி
விலத்திப்போனது?

உழவு சாலுக்குள் விதைபடாத இசங்கள்
ஆகக் குறைந்தது
வரம்புக்கு கூட வரவில்லையே!!
அறுவடை முடிந்து
மூட்டை கட்டும் போதும்
சாக்கில் கூட எதுவும் எழுதப்படவில்லை
விற்பனைச் சந்தையில் கூட
சண்டைவரவில்லை
இறுதியில்
சந்தையை பற்றி திண்ணையில்
இருந்து பேசப்பட்டது

உழைத்துக் கழைத்து
ஓய்வெடுக்க நல்ல திண்ணைகள்
உச்சி வெயிலில் நாரியாத்த
நல்ல திண்ணைகள்
நாலுவார்த்தை கதைக்க
ஏற்ற இடம்
கதைகள் பயிர்போல் தழைத்து
சித்தாந்தங்கள் தத்துவங்களாக மாறும்
காற்றையும் காலத்தையும்
இவ்வாறுதான் கண்டறிந்து பயிர் செய்தோம்

எப்படி நுட்பமாக திண்ணைகள் பறிக்கப்பட்டது?
எப்படி வயல் வரம்பில்
உழைப்பாளிகள்
இழைப்பாற நிர்ப்பந்திக்கப்பட்டனர்?

நிழலையும் புடுங்கிய தத்துவங்களும் இசங்களும்
வெள்ளை வேட்டிகளுக்கு மட்டும் சொந்தமானது
திண்ணைகளில் இருந்து
வயலை ஆட்சி செய்ய அதிகாரம் யார் தந்தது?

இசங்களுக்கும் தத்துவங்களுக்கும்
சோறுபோட்டு கழைத்துவிட்டனர்
இன்னும் ஒய்யாரமாய் திண்ணையில் சரிந்து கொண்டு
எத்தனை காலம் புளிச்சல் ஏவறை விடப்போகின்றனர்?

உங்கள் வெள்ளை வேட்டிகளை புடுங்கி
காவல் வெருளிக்கு கட்டும் நேரத்தில்
குழாய் போட்டு சோபாவில் குந்திவிட்டீர்கள்
இருந்தும் புளிச்சல் ஏவறை நாறுகின்றதே
எப்படியோ
உங்கள் கூச்சல் வயலை விட்டு
தூரப்போய்விட்டது.

No comments:

Post a Comment