Tuesday, May 11, 2010

புத்திசீவிதம்

பெருகிவரும் கூச்சல்
ஜன்னல்களை ஊடறுத்து
வீடுகளை நிரப்பி நிற்கின்றது

கூச்சலின் மத்தியில்
நுண்ணறிவு போராடுகின்றது
ஆயிரம் விந்தணுவில்
ஒன்று கருவறையில் சேர்வது போல்
நுண்ணறிவின் நம்பிக்கை
எல்லோரிடத்திலும்

அரசர்களும் சிம்மாசனங்களும்
குடியானவர்களை விட
கூடுதலாகி விட்டது

எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள்
இருந்தும்
எந் நாடு என்று எவரும் அறியார்.

அரியணைகளுடன்
உலகமெல்லாம்
அலையும் மன்னர்கள்
குடியானவர்களை தொலைத்ததை
சற்றேனும் சிந்திப்பாரில்லை

ஆழ்வதற்கு எதுவும் இல்லை
ஆகக் குறைந்தது
வேலி முருங்கையும்
சாய்மனைக் கட்டிலும் கூட இல்லை
இருந்தும்
ஆட்சி செய்கின்றார்கள்

அரசனும் நானே
மந்திரியும் நானே
மக்களும் நானே

என் கட்டளைகளை கேட்க
ஒருவன் இருந்தால் போதும்
இல்லா விட்டாலும் பரவாயில்லை
எங்கிருந்தும் நான் அழ்வேன்.

உலகில் இவர்போல்
நம்பிக்கையுள்ளவர் யார்?

உடைவாளும் கிரீடமும்
கோமணமும்
உண்மையில் இல்லாவிடிலும்
பத்திரமாக நாக்கில்
இன்னும் பளபளப்பாக

மன்னர்கள் வருகின்றார்கள்
வருகை அறிவிக்க எவரும் இல்லை
பராக் சத்தம் கேட்கவில்லை
ஓரத்தில் யாரோ
பாக்கி என்று முணுமுணுத்தது
செவிடன் காதில் ஊதிய சங்காய்
மன்னர் வீறுநடை போடுகின்றார்.

சில மன்னர்களை பார்க்க
ம சே துங் நினைவுக்கு வருகின்றர்
கார்ல் மார்க்ஸ் நினைவுக்கு வருகின்றார்
காஸ்ரோவும் சேவும் கலந்த
ஒரு உருவம் நினைவுக்கு வருகின்றது

என்னும் உலகின் அத்தனை புரட்சியாளர்களும்
கண்ணெதிரே நினைவுக்கு வருகின்றார்கள்
என்ன புண்ணியம் செய்தனோ
என் இனத்தை நினைக்க இவ்வளவு மகிழ்ச்சி
என்னுள் பொங்கி வழிகின்றதே

No comments:

Post a Comment