Sunday, May 9, 2010

கள்ளிச் செடிகள்

கள்ளிச் செடிகள்

எனது செயல்களில்
அவர்கள் குறைபாட்டை காணவில்லை
மாறாக
எனது செயலையே குறையாக கண்டார்கள்
எனது பிறப்பில் குறைகண்டார்கள்
எனது ஊரில் குறை கண்டார்கள்
எனது கடவுள் மீதும் குறை கண்டார்கள்

அனேகமாக எல்லாம் எனக்கு அப்பாற்பட்ட
விசயங்களாகவே இருந்தது
என்னால் திருத்த முடியவில்லை
திருத்தவும் முடியாது

எனது உணர்வுகள் நிரந்தரமாக
தவிக்கத் தொடங்கியது
வற்றிப்போன குளத்தில்
பொருக்கு வெடிப்பது போல்
எனது உணர்வுகள் வெடித்திருந்தது.
என்னைப் போலவே எல்லோருக்கும்
நிச்சயமாக இருந்தது.

உணர்வுகளின் இடுக்குகளில்
முளைத்து நிற்கும்
கள்ளிச்செடிகள்
கண்ணீர் வறண்டபோதும்
வளர்கின்றது
இலைகளில் முட்கள்
கூர்மையாக திக்கொன்றாக நீட்டி நிற்கின்றது

விசனம் வரும்போதெல்லாம்
ஒன்றோடு ஒன்று முட்டி
பால்வடிகின்றது
உணர்வுகளின் இடுக்குகள்
நிரம்பி வழிகின்றது

பாலின் சுவையை அனுபவிக்க
பழகிவிட்டோம்
தாய்ப் பாலின் சுவை இரண்டு வருடமாயின்
கள்ளிப்பாலின் சுவை இடுகாடு வரையும் வருகின்றது

அவ்வப்போது
தேசியவெள்ளம் வந்து
குளத்தை நிறைத்து வெடிப்பை நிரவி
சேறாக்கி விடுகின்றது
தட்டுத்தடுமாறி தாமரைகளும் முளைத்துப் பூக்கின்றது
இருந்தும் கள்ளிகள் அழிவதில்லை
நீருக்குள் அமிழ்ந்து உரசுகின்றது
கோடைகாலம் வந்தவுடன் மீண்டும் துளிர்க்கின்றது

எத்தனை அழகிய செடிகள் இருந்தும்
என் உணர்வின் இடுக்கில்
அவை முளைத்ததில்லை
காற்று வாக்கில் வந்த விதைகள்
தவறி முளைத்தாலும் நான் வளரவிடுவதில்லை

கள்ளிகளை நாம் ஆராதிக்கின்றோம்
எனது அறிவையும் கடந்து நேசிக்கின்றேன்
இந்த வினோதம் தானா எனது கடவுள்?
அம்மணமாய் தெருவில் அலைகின்றபோதும்
கெளரவமாய் சிரிக்க கள்ளிகள் எனக்கு பலம்தருகின்றது.

எனது தாயை புதைத்த இடத்தில்
இத்துப்போன எலும்புகள் அனாதயாய்
மண்ணுக்குள் மக்கிக்கொண்டிருக்கும்
இரண்டு கள்ளிச் செடிகள் அதிலும் செழித்து
எமது இருப்பின் அடையாளமாய்
உரசிக்கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment